Friday, November 03, 2006

திவ்ய தேசம் 6 - திருக்கண்டியூர்

இந்த வைணவ திவ்ய தேசம், திருவையாறிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஹர சாப விமோசனப் பெருமாள், பலிநாதர் மற்றும் பிருகுநாதர் என்றழைக்கப்படும் இக்கோயிலின் மூலவர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். உத்சவ மூர்த்தியின் திருநாமம் கமலநாதர். தாயார் கமலவல்லிக்கு தனி சன்னிதி உண்டு. தீர்த்தமும், விமானமும் முறையே கபால மோக்ஷ புஷ்கரிணி மற்றும் கமலாக்ருதி விமானம் என்றும் அறியப்படுகின்றன. நரசிம்மர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோருக்கும் இங்கு தனி சன்னிதிகள் உள்ளன.
Photobucket - Video and Image Hosting
திருக்கரம்பனூரிலும், திருக்குறுங்குடியிலும் கூறப்படும் தல புராணமே, இங்கும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடமும், பெருமாளிடமும் அவ்வோட்டில் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும், அதனாலேயே தலப்பெருமாள் (சிவபெருமானின் சாபத்தையே நீக்கியதால்!) ஹர சாப விமோசனப் பெருமாள் என்று திருநாமம் பெற்றதாகவும் தலபுராணம் சொல்கிறது.

இவ்வைணவ திருக்கோயில் இரண்டு பிரகாரங்களுடன் விஸ்தாரமாக காணப்படுகிறது. இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது. பிரம்மோத்சவம் பங்குனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமங்கையாழ்வார் மட்டும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரே ஒரு பாசுரத்தில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்:
***************************
2050@..
பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)

பிரம்மனின் (பிடுங்கப்பட்ட ஐந்தாவது தலையின்) ஓட்டை கையில் ஏந்தி, பிட்சை பெற்று உண்ட சிவபெருமானுக்கு சாப விமோசனம் அளித்தவன், உலகம் போற்றும் திருக்கண்டியூரில் அருள் பாலிக்கிறான். திருவரங்கம், திருமெய்யம், திருக்கடல் மல்லை ஆகிய தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் அப்பிரானை வணங்கி, அவன் திருவடி பற்றி உய்வு பெறுவதை விடுத்து நமக்கு வேறு வழியில்லை !
*****************************

திருவையாறில் அமைந்துள்ள (தேவாரத்தில்) பாடப் பெற்ற பஞ்சனாதீஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தானங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே திருக்கண்டியூர் வீரட்ட சிவாலயம், சைவ-வைணவ ஓற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது ! சிவாலயத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதி தேவிக்கும் சன்னிதிகள் உள்ளன.

உபரித் தகவல்:
திருக்கண்டியூருக்கு அருகே கல்யாணபுரம் என்ற பசுமையான கிராமத்தில் கல்யாண வேங்கடசுவரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னனின் துணைவியின் (பெயர்: கல்யாணி) நினைவாகவே கல்யாணபுரம் என்ற பெயரை இக்கிராமம் பெற்றது என்று கூறப்படுகிறது. தியாகப்பிரம்மம் வழிபட்ட புண்ணியத் தலமிது ! வைணவப் பெருந்தகைகள் பலரும் கல்யாணபுரத்தை விசேஷமான தலமாகக் குறிப்பிடுகிறார்கள்.
Photobucket - Video and Image Hosting
பிரம்மாண்ட புராணத்தில், திருக்கண்டியூர் மற்றும் அதனருகில் உள்ள ஸ்ரீநிவாஸ ஷேத்திரம் பற்றிய குறிப்புகள் உள்ளதால், கல்யாணபுரக் கோயில், மிகப் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது ! தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற திருநாமம். இங்குள்ள உத்சவ விக்ரகம், முதலில் திருப்பதியில் இருந்து, பின்னர் இங்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பெற்றது.

வருடம் முழுதும், இக்கோயிலில் விழாக்களும், உத்சவங்களும் நடைபெறுகின்றன. சித்திரையில் வசந்த உத்சவமும், அட்சய திருதியையும், வைகாசியில் விசாக உத்சவமும், நவராத்திரியும், தீபாவளியும், கார்த்திகையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தினமும் கருடசேவை நடைபெறுகிறது என்ற தகவல் ஆச்சரியத்தை தரும் !

சுதர்சன ஆழ்வாருக்கும், உடையவர் ராமானுஜருக்கும், பன்னிரு ஆழ்வார்களுக்கும் தனிச் சன்னிதிகள் இங்கு உள்ளன. கண்ணாடி அறையும் உண்டு. சென்ற வருடம் கோயில் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து மகிழ்ந்தனர்.

என்றென்றும் அன்புடன்
பாலா

### 253 ###

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலா

வேண்டுகோளை ஏற்று, இப்பக்கம் உடனே திரும்பி, பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி! முழுதும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

குமரன் (Kumaran) said...

உடனே அடுத்த திவ்யதேசப் பதிவை இட்டதற்கு நன்றி சீனியர் சார். திருமங்கையாழ்வார் பாசுரத்தைப் படித்திருக்கிறேன். பாசுரத்தில் அப்படி ஆழ்வார் சொன்னதால் பெருமாள் 'ஹர சாபம் தீர்த்த பெருமாள்' ஆனாரா இல்லை பெருமாள் ஏற்கனவே அந்தப் பெயரால் அழைக்கப்பட்டதால் ஆழ்வார் அப்படி பாடினாரா தெரியவில்லை. :-) ஏனெனில் ஒருவனூர் என்று நிறுத்தி பின்னர் கண்டியூர், அரங்கம், மெய்யம், கச்சி, பேர் மல்லை என்று நிறைய திவ்யதேசங்களைச் சொல்கிறாரே. அந்த ஒருவனூர் முதலில் கண்டியூர் வந்ததால் அதனைக் குறித்தது என்று பொருள் கொண்டுவிட்டார்களோ?

(என் பதிவில் நீங்கள் சீனியர் என்று சொன்னீர்கள். எந்த விதத்தில் என்றும் சொன்னீர்களென்றால் மகிழ்வேன். பதிவுலகில் சீனியரா? படித்த இடத்தில் சீனியரா?...)

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
வாங்க ! முழுசா படிச்சுட்டு மறுபடியும் வாங்க :)
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
வருகைக்கு நன்றி. இது போன்ற பதிவுகள் தொடர்ந்து எழுத நீங்கள், கண்ணபிரான் மற்றும் சங்கர் ஆகியோரும் ஒரு முக்கிய காரணம் !
//(என் பதிவில் நீங்கள் சீனியர் என்று சொன்னீர்கள். எந்த விதத்தில் என்றும் சொன்னீர்களென்றால் மகிழ்வேன். பதிவுலகில் சீனியரா? படித்த இடத்தில் சீனியரா?...)
//
நான் சீனியர் என்று குறிப்பிட்டது, தமிழ் வலையுலகை வைத்து. கல்லூரி சீனியராக இருக்க முடியாது, நான் GCT, நீங்கள் CIT :) ஒரு தகவல், நான் படித்தது 1982-86. வயதில் சீனியர் தான் என்று எண்ணுகிறேன் !
எ.அ.பாலா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிக அழகாகச் சொல்லி உள்ளீர்கள் பாலா, மிக்க நன்றி!
"மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே" என்று ஆழ்வார் அடித்துப் பேசுகிறார் பாருங்கள்!

இங்கே சிவபெருமான் நமக்கு உணர்த்தும் பாடம் மிக முக்கியமான ஒன்று!
ஈசன் தான் உற்ற சாபத்தை மாற்றவோ மறுக்கவோ செய்யாது அதை ஈசனே ஆயினும் ஏற்று, பக்குவத்தை மானுடத்திற்கு எடுத்துரைத்தார். சதா பொய் வழக்கு போடும் இக்காலத்தில், ஈசன் மெய் வழக்காடும் (உடலால் வழக்காடும்) விதத்தை எப்படிப் போற்றுவது!

நீங்கள் சொன்னது போல், அருகில் உள்ள வீரட்டாணம் சிவன் கோவில் உள்ள மூர்த்திக்கு பிரம்ம சிர கண்டீஸ்வரர் என்றே பெயர்!

கல்யாணபுரம் பற்றி நீங்கள் சொன்னதும் சிறப்பு, பாலா!
சத்குரு தியாகராஜர், தன் உஞ்சவிருத்திக்கு இத்தலம் வருவார் என்பது பலரும் சொல்லக் கேட்டுள்ளேன்! கஜலட்சுமியாய் கல்யாணபுரம் தாயார் அழகோ அழகு! அடுத்த முறை திருவையாறு செல்லும் போது மீண்டும் செல்ல வேண்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்,
ஆழ்வார் பாசுரத்துக்கும் முன்பே, 'ஹர சாபம் தீர்த்த பெருமாள்' என்ற வழக்கம் இருந்தது போலும்; ஏனெனில் அருகில் ஈசன் பெயரும் "பிரம்ம சிர கண்டீஸ்வரர்" என்றே தான் வழங்கி வருகிறது! தீர்த்தமும் கபால தீர்த்தம் என்று தான் பெயர். ஆக "ஒருவனூர், உலகம் ஏத்தும் கண்டியூர்" என்பது, "வில்லிபுத்தூர் வேதக் கோனூர்" என்றவாறே பொருள் கொள்வது ஏற்புடைத்தாக இருக்கும்!

திருமங்கையாழ்வார் வேகம் தான் என்னே! அவர் யாத்திரை வேகத்துக்கு இது போல் பல திவ்ய தேச எம்பெருமான்களை ஒரு பாசுரத்துள் அடக்கி விடுகிறார் பாருங்கள்! இதே போல் திருநின்றவூர், கடல்மல்லை எம்பெருமான்களையும் ஒரே பாசுரத்துள் அடக்கி விடுவார்! speed limit என்பதையே அறியாத ஆழ்வார் போலும் :-))

ஆங்...சொல்ல மறந்து போனேனே!
சீனியர்களுக்கு, ஜூனியரின் வணக்கங்கள்! :-))))

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
விரிவான தகவல்கள் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் மற்றும் குமரனின் மறுமொழிகள் பதிவின் மெருகைக் கூட்டுகின்றன என்பதில் ஐயமில்லை !!!

//ஆங்...சொல்ல மறந்து போனேனே!
சீனியர்களுக்கு, ஜூனியரின் வணக்கங்கள்! :-))))
//
ஆசிர்வாதங்கள், மங்களம் உண்டாகட்டும் :)))

said...

Good post

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails